Pages

Sunday, July 5, 2020

GHG PROMISE WORD (TAMIL) - 6 | எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு


அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. லூக்கா 5:13

பலவிதமான பெலவீனத்தினால் நிறைந்து சோர்வுற்று விடுதலைக்காக ஏக்கத்தோடு காத்திருக்கின்ற உன்னைப் பார்த்து, எனக்குச் சித்தமுண்டு சுத்தமாகு என்று இயேசு சொல்கின்றார்.

அந்த நாளிலே குஷ்டரோகத்தினால் வேதனையோடு இயேசுவை தேடி வந்த மனிதனை அவர் தொட்டு சுத்தமாக்கி அவன் வாழ்விலே அற்புதம் செய்தார். இந்த நாளிலேயும் உன்னை பற்றிக்கொண்டிருக்கின்ற பெலவீனத்தினின்று நீ விடுவிக்கப்படுவாய் என்று ஆவியானவர் சொல்கின்றார்.

குஷ்டரோகம் நிறைந்த மனிதன் இயேசுவினிடத்திலே வேண்டிக்கொண்டபொழுது இயேசு என்ன செய்தார்?

1.   தமது கையை நீட்டினார்.

உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். சங்கீதம் 18:16

இந்த நாளிலே ஜலப்பிரவாகம் போன்று உன்னை மூழ்கடிக்க எழும்பி உன்னை நிர்மூலமாக்க எத்தனிக்கின்ற உன் வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து இயேசு உன்னை தம் கரத்தினால் தூக்கியெடுத்து உன்னை வாழவைப்பார்; ஒன்றும் உன்னை சேதப்படுத்துவதில்லை என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகின்றார்.

2.   இயேசு தொட்டார்.

இயேசு அவனை தொட்டபொழுது அவன் வாழ்வு மறுரூபமடைந்தது. அவனுடைய கடந்த கால துக்கங்களை நீக்கி சந்தோஷத்தினால் அவனை நிரப்பிற்று

இயேசு உன் வாழ்வை தொடுவார். உன் வாழ்வு மறுரூபமடைந்து, கடந்த கால துக்கம் நீங்கி நீ சுகமாய் வாழ்வாய் என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகின்றார்.

3.   யாரை இயேசு தொட்டார்?

இயேசு ஒரு குஷ்டரோகியை தொட்டார். அவன் ஒருவராலும் விரும்பப்படாதவன். எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டவன். அப்படிப்பட்டவனை இயேசு அன்போடு தொட்டார். இன்றும்கூட ஒருவராலும் விரும்பப்படாத உன்னை இயேசு விரும்புகின்றார் என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும் என்று ஆவியானவர் விரும்புகின்றார். அவர் உன்னை ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை.

“…என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. யோவான் 6:37

4.   எனக்குச் சித்தமுண்டு என்றார்.

உன் வாழ்வைக் குறித்த தேவனுடைய சித்தம் என்ன?

நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது…” - I தெசலோனிக்கேயர் 4:3

நீ பரிசுத்தமுள்ளவனாக வாழவேண்டும் என்று இயேசு எதிர்பார்க்கின்றார். உன் பாவங்களில் நீ மரிப்பது அவருக்கு விருப்பமில்லை. உன்னை வாழவைப்பதற்கென்றே அவர் தமது ஜீவனை சிலுவையில் பலியாக கொடுத்தார். இன்றும் அவர் உயிரோடிருக்கின்றார். உனக்காக பரிதபிக்கின்றார். அவர் சித்தத்தை நிறைவேற்ற உன்னை நீ ஒப்புக்கொடுப்பாயா?

5.   சுத்தமாகு என்றார்.

“…இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். I யோவான் 1:7

உன்னை சுத்தமாக்க வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் சுத்தமாக உன்னை நீ ஒப்புக்கொடுப்பாயானால் உன் அசுத்தம் நீங்க நீ  முற்றிலும் சுத்தமாக்கப்படுவாய்.

இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. மத்தேயு 26:28

பாவத்திலே உழன்று வேதனையோடு இன்று இயேசுவினிடத்தில் வந்திருக்கின்ற உனக்கு பாவமன்னிப்பு உண்டு. இதோ, ஒரு புதிய காரியத்தை உன்னில் செய்ய தேவன் சித்தம் கொண்டிருக்கின்றார். நீ சுத்தமாவாய். உன் வாழ்வு மறுரூபமாக்கப்படும் என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகின்றார்.

#GHG Promise Word

No comments:

Post a Comment