Pages

Saturday, August 8, 2020

GHG PROMISE WORD (TAMIL) - 8 | உங்களுக்குச் சமாதானம்

“…சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.” யோவான் 20:19

இந்த நாளிலும் பயத்தினால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாதபடி கலக்கத்தினால் நெருக்கத்தின் பாதையிலே கடந்து செல்கின்ற உன்னைப் பார்த்து, ‘உனக்குச் சமாதானம்என்று இயேசு சொல்கின்றார். தேவன் தம்முடைய சமாதானத்தினால் நிச்சயமாக நிரப்பி உன்னை வழிநடத்துவார்.

 1.         உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார்

“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.” - யோபு 19:25

இயேசு மரித்து விட்டார் என்று அறிந்திருந்த சீஷர்களால் அவர் உயிர்தெழுந்து விட்டார் என்று அவர்களில் சிலர் சொன்னபொழுது, அதை எளிதாக அவர்களால் நம்ப முடியவில்லை. அவர்களுடைய அவநம்பிக்கையினாலேயே அவர்களின் வாழ்வில் பயம் சூழ்ந்திருந்தது. உயிர்தெழுந்த தேவனுடைய மகிமையை கண்டபொழுது அவர்களுக்குள் பெலன் உண்டானது. இயேசு கிறிஸ்து இன்றும் உயிரோடிருக்கின்றார்.

நீ பயப்படாதே. உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார். அவருடைய உயிர்தெழுதலின் மகிமையையும் வல்லமையையும் நிச்சயமாய் நீ காண்பாய் என்று ஆவியானவர் திட்டமாய் உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.

 2.         கர்த்தர் உனக்கு ஆதரவாயிருப்பார்

“என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.” - சங்கீதம்  18:17,18

உன்னை நிர்மூலமாக்கும்படி உனக்கு விரோதமாக மனிதர்கள் எழும்பியிருக்கலாம். அவர்கள் உன்னிலும் பெரியவர்களாய் பலவான்களாய் இருக்கலாம். ஆனாலும் உனக்கு ஆதரவாக எழும்பியிருக்கின்ற கர்த்தர் உன்னை நெருக்கி மனமடிவாக்குகின்ற மனிதர்களைவிடவும் பெரியவர். சீஷர்கள் எந்த யூதர்களுக்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்தார்களோ, அவர்களுக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து பிரசிங்கிக்க தைரியமாக நின்றார்கள்.

உன் எதிராளிகள் உன்னை மேற்கொள்ளுவதில்லை. தேவன் உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பதில்லை. உன்னை ஒடுக்குகிறவர்களை நீ கொள்ளையிடுவாய். அவர்களுக்கு முன் உன் தலை உயர்த்தப்படும். தேவனுடைய நாம மகிமைக்காக நீ அவர்களுக்குமுன் சாட்சியாக தைரியத்தோடு நிற்பாய் என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகின்றார்.

“…ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” - 1 யோவான் 4:4

 3.         உனக்கு சந்தோஷம் உண்டாகும்

“…சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள்.” - யோவான் 20: 20

தேவன் உன் வாழ்வில் வெளிப்படுவதினால் உன் கவலைகள் அனைத்தும் மாறும். உன் துக்கம் சந்தோஷமாக மாறுவதையும், உனக்குள் ஒரு புதிய நம்பிக்கை உண்டாகுவதையும் நீ காண்பாய்.

இன்று பயத்தினால் நிறைந்திருக்கிற நீ, கர்த்தருக்காய் சீக்கிரத்தில் எழும்பி பிரகாசிப்பாய். அவரைக் குறித்த வைராக்கியம் உன் உள்ளத்தில் பொங்கும். உன் வாழ்வு மறுரூபமாகும். அது உன் கண்களுக்கும் மற்றவர்களின் கண்களுக்கும் ஆச்சரியமாயிருக்கும் என்று ஆவியானவர் வாக்குப்பண்ணுகின்றார்.

“…நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.” யோவான் 16: 22

 

#GHG Promise Word

No comments:

Post a Comment