மாற்கு 10:49 “…திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார்…”
உன் வேண்டுதல் தேவ சந்நிதியில் எட்டினது. உன் வாழ்வை மறுரூபப்படுத்தும்படி இயேசு கிறிஸ்து இன்று உன்னை தம்மிடமாக அழைக்கின்றார் என்று ஆவியானவர் உனக்கு சொல்கின்றார்.
குருட்டுப்பிச்சைக்காரனாயிருந்த பர்திமேயுவிற்கு அற்புதம் செய்து தமக்கு பின் செல்லுகிறவனாக இயேசு கிறிஸ்து மாற்றினார். இன்று உன்னுடைய வாழ்விலும் அற்புதம் செய்ய விரும்புகின்றார்.
1. திடன்கொள்ளுங்கள். இயேசு உலகத்தை ஜெயித்தார்
“…உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். என்றார்.”
- யோவான் 16:33
உங்கள் வாழ்வில் எதிர்ப்படுகின்ற சோதனையினால், உபத்திரவத்தினால் சோர்ந்து போய் இருக்கின்றீர்களோ? கலங்காதிருங்கள். திடன்கொள்ளுங்கள்! இயேசு கிறிஸ்து உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். நீங்கள் அவராலே ஜெயிப்பீர்கள்.
2. திடன்கொள்ளுங்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது
“…மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.” – மத்தேயு 9:2
பாவத்தினால் பெலனற்று, விழுந்துப்போய், செயலிழந்த ஓர் நிலைமையில் காணப்படுகின்ற உன்னுடைய பாவங்களை நான் மன்னித்து உன்னை எழும்பிநிற்கச் செய்வேன் என்று ஆண்டவர் இன்று உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்.
இன்று நீ இருக்கின்ற பிரகாரமாய்; முழுமனதோடு மனந்திரும்பி தேவனிடத்தில் வருவாயென்றால் உன் வாழ்வை மாற்ற தேவன் வல்லவராயிருக்கின்றார். நீ எழும்பி அவருக்காக பிரகாசிக்கவேண்டுமென்று தேவன் விரும்புகின்றார்.
3. திடன்கொள்ளுங்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சிக்கும்
“…மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.” - மத்தேயு 9:22
பன்னிரென்டு வருஷமாய் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ விசுவாசத்தோடு இயேசுவினிடமாக வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு சுகம் பெற்றாள்.
பல வருடங்களாய் நன்மையை எதிர்ப்பார்த்து நீங்கள் சோர்ந்து போய் இருக்கலாம். திடன்கொள்ளுங்கள். நீங்கள் தேவன்பேரில் வைத்திருக்கின்ற விசுவாசத்தை விட்டுவிடாதிருங்கள். நிச்சயமாக நீங்கள் தேவனுடைய மகிமையை காண்பீர்கள். இயேசு கிறிஸ்து உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். உங்களை வெட்கப்படவும் விடமாட்டார்.