“…நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்.” லேவியராகமம் 20:26
உன்னை நான் தெரிந்து கொண்டதற்கு ஒரு நோக்கம் உண்டு என்று உங்களை மற்ற ஜனங்களைவிட்டு பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்லுகின்றார்.
எதற்காக தேவன் உங்களை பிரித்தெடுத்திருக்கின்றார்?
நீங்கள் அவருடையவர்களாயிருக்கும்படிக்கு உங்களை அவர் தெரிந்தெடுத்திருக்கின்றார்.
நீங்கள் தேவனுடையவர்கள். சர்வ வல்லமையுள்ள தேவனின் சொந்த ஜனம். உங்கள்பேரில் அவர் வைராக்கியம் கொண்டிருக்கின்றார். எவ்வளவு பெரிய பாக்கியம்!
தேவனுடையவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும்? தேவன் உங்களிடத்தில் எதிர்பார்ப்பது என்ன?
1. பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக
“கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக…” லேவியராகமம் 20:26
தேவனுக்கேற்ற பரிசுத்தவான்களாயிருக்கும்படிக்கு நீங்கள் செய்யவேண்டியது என்ன?
“நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்…” - லேவியராகமம் 20:23
நீங்கள் இந்த உலகத்திற்கு ஒத்தவேஷந்தரிக்க அழைக்கப்பட்டவர்கள் அல்ல என்று இந்த நாளிலே ஆவியானவர் உங்களுக்கு சொல்கின்றார்.
சிம்சோனை தேவன் தமக்கென்று நசரேயனாக ஒர் உன்னத நோக்கத்திற்காக தெரிந்துகொண்டார். ஆனால் அவன் தன்னை பாவத்திற்கு ஒப்புக்கொடுத்தபோது பரிசுத்தத்தை இழந்தவனாய் தேவனுடைய உறவை இழந்துபோனான். பாக்கியவானாய் இருக்க அழைக்கப்பட்டவன் பலட்சயமாகி வேடிக்கை காட்டுகிறவனாக பரிதாபமாய் மாறிப்போனான்.
தேவனுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியும்படி உங்களை அர்ப்பணியுங்கள். எந்த ஜனத்தினின்று தேவன் உங்களை பிரித்தெடுத்தாரோ அவர்களுடைய வழிகளில் நடவாதிருங்கள்.
2. துதியினால் நிறைந்திருங்கள்
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். ஏசாயா 43:21
லூக்கா 17ம் அதிகாரம் 12-16ம் வசனங்களில் ஒரு சம்பவத்தை வாசிக்கலாம்.
இயேசு தம்மை நோக்கி சத்தமிட்ட பத்து குஷ்டரோகிகளை நோக்கி நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். ஆனால் அதில் ஒருவன் மாத்திரமே திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்.
இதை வாசிக்கின்ற நீ, தேவனிடத்தில் நன்மையை பெற்றுக்கொண்டு தங்கள் வழியே கடந்து சென்ற அந்த ஒன்பது பேரை போல் இருக்கின்றாயா அல்லது உனக்காக நன்மை செய்து உன்னை உயர்த்தின தேவனுக்கு துதியும் மகிமையும் செலுத்துகிறவனாக காணப்படுகின்றாயா?
முறுமுறுக்காமல் தேவன் உங்களுக்காக செய்த நன்மைகளை எண்ணி அவரைத் துதியுங்கள் என்று ஆவியானவர் உங்களுக்கு சொல்லுகின்றார்.
#GHG Devotions