சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்?... ஆதியாகமம் 21:7
இன்று உன் வாழ்க்கை எவ்வித ஆசீர்வாதமுமின்றி வெறுமையாய் இருக்கின்றதா? உன்னை சுற்றி இருக்கின்றவர்கள் பார்வைக்கு நீ அற்பமாய் காணப்படுகின்றாயோ? உன் வாழ்க்கை மேம்பட வழியே இல்லையென்று நீயும் மற்றவர்களும் எண்ணுகின்றீர்களோ?
சாராளும் ஆபிரகாமும் அவனை சுற்றியிருக்கின்ற மற்றவர்களும் சாராள் பிள்ளை பெற வாய்ப்பேயில்லை என்று நினைத்தார்கள்.
ஆபிரகாமுடைய வார்த்தை ஆதியாகமம் 17:17ல் எழுதப்பட்டிருக்கின்றது.
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
சாராளுடைய நினைவுகள் ஆதியாகமம் 18:13ல் எழுதப்பட்டிருக்கின்றது.
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
நீயும்கூட உன் வாழ்வின் இன்றைய நிலைகளை பார்த்து, எல்லாம் முடிந்துவிட்டது இனி முன்னேற வழியேயில்லை என்று எண்ணுகின்றாய் அல்லவா? நீ கலங்கத் தேவையில்லை. ஏன் தெரியுமா?
சாராள் பிள்ளைகளுக்குப் பால் கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? எந்த மனிதனாலும் சொல்ல முடியாது.
மனிதரால் இது கூடாதுதான். ஆனால் தேவனால் கூடும்.
ஆதியாகமம் 18:10ல் தேவனுடைய வார்த்தை இவ்விதமாக வெளிப்படுகின்றது:
அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன் அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
தேவனுடைய வாக்குப்படி சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குமாரனை பெற்றாள். அந்த பிள்ளைக்கு பாலும் கொடுத்தாள்.
வெறுமையான உன் வாழ்வில் தேவன் ஆசீர்வாதமான மழையை வருஷிக்கப் பண்ணுவார். வறண்ட நிலமாக இருக்கின்ற நீ வற்றாத நீருற்றை போலாவாய். எந்த ஆசீர்வாதமான காரியம் நடக்கவே நடக்காது என்று நீயும் மற்றவர்களும் உன்னைக் குறித்து எண்ணீனீர்களோ அந்த காரியத்தை தேவன் நடத்திக் காட்டுவார். அது உன் கண்களுக்கும் உன்னை சுற்றியிருக்கிறவர்களுக்கும் ஆச்சரியமும் அதிசயமுமாயிருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் இன்று உனக்கு வாக்குப் பண்ணுகின்றார்.
#GHG Devotions