“…நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா…”– யோவான் 11:40
உன் இருதயத்தை நிரப்பியிருக்கின்ற பாரத்தினால் கலங்கித் தவித்து அழுது கொண்டிருக்கின்ற உன்னைப் பார்த்து, நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று ஆவியானவர் சொல்கின்றார்.
1. இயேசு நிச்சயமாக வருவார்
“…இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.” – யோவான் 11:15
இனி அவ்வளவுதானா? இயேசு என்னை கைவிட்டுவிட்டாரா? என்று நீ எண்ணுகின்றாய் அல்லவா? மார்த்தாளும், மரியாளும் கூட இயேசு இருந்திருந்தால் அவர்களுடைய சகோதரன் மரித்திருக்க மாட்டான் என்பதாக எண்ணினார்கள். ஆனாலும் இயேசு கடந்து வந்து அவர்களுடைய கண்ணீரை ஆனந்த களிப்பாக மாற்றினார். அதே இயேசு உன் வாழ்விலும் அற்புதம் செய்யும்படி நிச்சயமாக வருவார். நீ வெட்கப்பட்டுப் போவதில்லை ஏனென்றால் அவர் உன்னை மறந்துவிடவில்லை என்று ஆவியானவர் உனக்கு சொல்கின்றார்.
“சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.” – ஏசாயா 49:14,15
2. உன் காத்திருப்பு முடிவடைகின்றது
“…கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.” - ஏசாயா 60:20
இயேசு ஒரு அற்புதம் செய்யமாட்டாரா என்று எதிர்பார்போடு காத்துக்கொண்டிருக்கின்ற உன் காத்திருப்பின் நாட்கள் முடிவடைகின்றது. மரித்த உன் அவயவங்களை ஆண்டவர் உயிர்ப்பிப்பார். தடைகளினால் நிறைந்து அடைக்கப்பட்ட சூழ்நிலைக்குள் சிக்கியிருக்கின்ற உன் வாழ்வின் ஆசீர்வாதங்களை இந்த நாளிலே இயேசு வெளியே கொண்டு வந்து உன்னை நன்மையினால் நிரப்புவார்.
3. நீ இழந்துபோன ஆசீர்வாதத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுவாய்
“இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான்...” - யோவான் 11:43,44
மார்த்தாளும், மரியாளும் தங்கள் சகோதரனை இழந்தார்கள். கர்த்தர் அவர்கள் இழந்துபோன ஆசீர்வாதத்தை திரும்ப அவர்களுக்கு தந்தார். நீ இழந்துபோன சமாதானத்தையும், சந்தோஷத்தையும் திரும்ப உனக்கு தேவன் தந்து, உன் மனதில் காணப்படுகின்ற வெறுமையையும், வேதனையையும் அவரே நீக்கிப்போடுவார் என்று ஆவியானவர் சொல்கின்றார்
4. கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும்
“…இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.” - யோவான் 11:4
“…இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.” யோவான் 11:45
இந்த நாளிலும் ஆவியானவர், “உன் வாழ்வில் காணப்படுகின்ற சூழ்நிலைகள் உன்னை மேற்கொள்ளுவதுமில்லை அவைகளால் நீ நிர்மூலமாவதுமில்லை. உன் வாழ்வில் தேவனுடைய மகிமை வெளியரங்கமாகும்; நீ அதைக் காண்பாய். தேவன் உன் வாழ்வின் மூலமாக மகிமைப்படுவார். உன் வாழ்வில் தேவன் செய்யப்போகின்ற மகிமையான காரியம் அநேகரை தேவனிடமாக திருப்பும்.” என்று உனக்கு வாக்குப்பண்ணுகின்றார்
#GHG Promise Word
No comments:
Post a Comment